Ticker

6/recent/ticker-posts

Ad Code

சொகுசு காரால் பிரதமர் கோபம்

  
பிரதமர் மோடி எவ்வளவு பிசியாக இருந்தாலும், தினமும், நாளிதழ்களை ஒரு நோட்டம் விடுவார். அவர், அப்படி படித்த போது, ஒரு செய்தி அவரது கண்களை உறுத்தியது. பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்கின் சேர்மன், இரண்டு ஆடி சொகுசு கார்களை வாங்கியிருக்கிறார் என்ற செய்தி தான் அது.
இந்த வங்கி தான், பண மோசடி செய்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பியோடிய நிரவ் மோடிக்கு, கோடிக்கணக்கில் கடன் கொடுத்திருந்தது. பிரதமர் மோடி, உடனே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு போன் செய்தார். 'கொரோனா பரவலையடுத்து, நாம், அரசு செலவுகளை குறைத்து கொண்டிருக்கிறோம். 'அப்படி இருக்கையில் இந்த வங்கி சேர்மன், கோடிக்கணக்கில் வங்கி பணத்தை செலவு செய்து கார் வாங்கியிருக்கிறார்; என்ன தான் நடக்கிறது' எனக் கேட்டாராம் பிரதமர்.

அடுத்த நிமிடம், நிதி அமைச்சர், அந்த வங்கி சேர்மனுக்கு போன் போட்டார். 'நீங்கள் இரண்டு ஆடி கார்களை வாங்கியிருக்கிறீர்களா' என அவர் கேட்க, சேர்மனுக்கு வியர்த்து விட்டது. 'கொரோனா பரவல் சமயத்தில், ஏன் இவ்வளவு செலவு செய்தீர்கள்' என, ஒரு பிடி பிடித்தார் நிதி அமைச்சர். 'நீங்கள் வேலையில் தொடர வேண்டுமானால், அந்த கார்கள் உங்களிடம் இருக்கக் கூடாது; இது பிரதமரின் உத்தரவு' என சொல்லி, போனை வைத்துவிட்டார் நிர்மலா சீதாராமன்.

அடுத்த நாளே, 'அந்த கார்களை திருப்பி கொடுத்துவிட்டேன்' என வங்கி சேர்மனிடமிருந்து, நிர்மலாவுக்கு போன் வந்தது. உடனே அவர் பிரதமருக்கும் இந்த விஷயத்தை சொல்லி விட்டார்.அத்துடன் அனைத்து பொதுத் துறை வங்கி சேர்மன்களுக்கும், 'தேவையில்லாமல் எந்த பொருளையும் அதிக விலை கொடுத்து வாங்கவே கூடாது' என, எச்சரிக்கையும் விடப்பட்டது.அந்த வங்கி சேர்மன் கார் வாங்கியதை, கூடவே இருந்த ஒரு அதிகாரி, 'லீக்' செய்யவே, அது செய்தியாக வெளியாகி, பிரதமர் மோடி வரைக்கும் போய்விட்டது.

Post a Comment

0 Comments