Ticker

6/recent/ticker-posts

Ad Code

நாட்டின் புலிகள் கணக்கெடுப்பு 'கின்னஸ்' சாதனையாக மாறியது

...



|ஜூலை 12,2020


நாட்டில், கேமராக்கள் உதவியுடன் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பு, உலக சாதனையாக, 'கின்னஸ்' புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

நாட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை, வனப் பகுதிகளில் கேமராக்கள் பொருத்தி கணக்கிட, 2018ம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, ஒரு லட்சத்து, 21 ஆயிரத்து, 337 சதுர கி.மீ., வனப் பகுதியில், 26 ஆயிரத்து, 838 இடங்களில், கேமராக்கள் பொருத்தப்பட்டன.இவற்றின் உதவியுடன்,நாட்டில், 2,967 புலிகள் இருப்பது கண்டறியப்பட்டு, அதன் முடிவுகளை, கடந்த ஆண்டு சர்வதேச புலிகள் தினத்தில், பிரதமர், நரேந்திர மோடி அறிவித்தார். இது, உலகிலேயே கேமராக்கள் வாயிலாக நடத்தப்பட்ட மிகப்பெரியகணக்கெடுப்பாக, 'கின்னஸ்'புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:அகில இந்திய அளவில்,கேமராக்கள் வாயிலாக, புலிகளின் எண்ணிக்கையை கணக்கீடு செய்தது, உலக சாதனையாக, கின்னசில் இடம்பெற்றுள்ளது பெருமைக்குரியது.இதை, நாட்டை தற்சார்புடையதாக மாற்றும், 'ஆத்மனிர்பர் பாரத்' திட்டத்தின் வெற்றியாக கருதலாம்.

பிரதமரின் தலைமையில், 'சங்கல்ப் சே சித்தி' திட்டத்தின் மூலம், நாட்டில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது என, நான்கு ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வெற்றியடைந்து உள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments