Ticker

6/recent/ticker-posts

Ad Code

பங்குச் சந்தையில் சீன முதலீடு; துவங்கியது தீவிர விசாரணை





     இந்திய பங்குச் சந்தைகளில், சீனாவைச் சேர்ந்த வெளிநாட்டு முதலீட்டு அமைப்புகள் செய்துள்ள முதலீடுகள் குறித்து, விசாரணை அமைப்புகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன.

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை, மோதலாக மாறியுள்ளது. எல்லையில் நடந்த மோதலில், நம் வீரர்கள், 20 பேர் கொல்லப்பட்டனர். அதையடுத்து, சீனாவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் உருவாக்கியுள்ள, 59 மொபைல்போன், 'ஆப்'களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத் தவிர, சீன நிறுவனங்களுடனான பல்வேறு ஒப்பந்தங்கள் மறுபரிசீலனை செய்யப்படுகின்றன. சில ஒப்பந்தங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
பிரச்னை:
இந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த, வெளிநாட்டு முதலீட்டு அமைப்புகள், நம் பங்குச் சந்தையில் செய்துள்ள முதலீடுகள் குறித்து, பல்வேறு விசாரணை அமைப்புகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன. எதிர்காலத்தில் பங்குச் சந்தையில் செயற்கையாக பிரச்னைகள் உருவாக்குவதை, சேதத்தை ஏற்படுத்துவதை தடுப்பதற்காக, இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சீனாவின் மத்திய வங்கி, அந்த நாட்டின் அரசு சார்ந்த முதலீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை செய்துள்ள முதலீடுகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அரசின் புள்ளி விபரங்களின்படி, நம் பங்குச் சந்தையில், 15 சீன அமைப்புகள், ஹாங்காங்கைச் சேர்ந்த, 98 அமைப்புகள் மற்றும் தைவானைச் சேர்ந்த, ஏழு அமைப்புகள் முதலீடு செய்துள்ளன. 

இதைத் தவிர, மொரீஷியஸ் நாட்டின் மூலமாக, 327 முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆய்வுஇதில் பெரும்பாலானவை, சீனாவைச் சேர்ந்த அமைப்புகள் செய்துள்ள முதலீடுகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதையடுத்தே, இந்த ஆய்வு துவங்கி உள்ளது. குறிப்பாக, சீனா மக்கள் வங்கி, சீனாவின் சமூக பாதுகாப்பு நிதி, சீனா சர்வதேச நிதி நிர்வாகம், சீனா முதலீட்டு வாரியம் ஆகியவை, அதிக அளவில் முதலீடு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

சீனாவின் மத்திய வங்கியான, சீனா மக்கள் வங்கி, எச்.டி.எப்.சி., நிறுவனத்தின், 1.01 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இதைத் தவிர, பல சீன அமைப்புகள், நம் நாட்டில் உள்ள, 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளன. இவை குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. 

உலக நாடுகளில் அதிகம் முதலீடு செய்துள்ள நாடுகளில், பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவற்றை பின்தள்ளிவிட்டு, ஐந்தாவது இடத்துக்கு சீனா முன்னேறி உள்ளது. குறிப்பாக, உலகம் முழுதும், 'கொரோனா' வைரஸ் பிரச்னை இருந்த நிலையில், இந்தாண்டு துவக்கத்தில் சீனா அதிக முதலீடுகளை செய்துள்ளது.

Post a Comment

0 Comments