Ticker

6/recent/ticker-posts

Ad Code

மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம்! மக்கள் திணறுவதால் அரசு முடிவு

தமிழகத்தில், மின் கட்டணம் செலுத்த, மேலும், 15 நாள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்கள், மொத்தமாக மின் கட்டணம் செலுத்த முடியாமல் திணறுவதால், இச்சலுகை வழங்க, அரசு முன்வந்துள்ளது. 

தமிழகத்தில், வீடுகளில், மின் வாரிய ஊழியர்கள், மின் பயன்பாட்டை கணக்கெடுத்த, 20 தினங்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், மின் வினியோகம் துண்டிக்கப்படும். பின், அபராதத்துடன், கட்டணம் செலுத்தியதும் மின்சாரம் வழங்கப்படும்.
பணமின்றி சிரமம்:
ஊரடங்கால், வீடுகளுக்கு, மின் பயன்பாடு கணக்கு எடுக்க, ஊழியர்கள் செல்லவில்லை. இதனால், அபராதம் இன்றி, கட்டணம் செலுத்த, மின் வாரியம் அவகாசம் வழங்கியது. வீடுகளில் மின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், பலருக்கும், அதிக மின் கட்டணம் வந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வசிப்போரில், மார்ச், 25 முதல், ஜூலை, 14 வரை கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ளவர்கள், தங்களின் கட்டணத்தை அபராதம் இன்றி செலுத்த, நேற்று வரை அவகாசம் வழங்கப்பட்டது.

வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்போர், நான்கு மாதங்களாக, வேலைக்கு செல்லாமல், வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால், கையில் பணம் இன்றி சிரமப்படும் பலரும், குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல், திண்டாடி வருகின்றனர். அவர்களால், அதிகம் வந்துள்ள மின் கட்டணத்தை, நேற்று அவகாசம் முடிந்தும், செலுத்த முடியவில்லை. இந்நிலையில், அபராதம் இன்றி கட்டணம் செலுத்த, வரும், 30ம் தேதி வரை, மின் வாரியம் அவகாசம் வழங்கியுள்ளது.

மின் வாரியம் விடுத்த செய்திக் குறிப்பு: நான்கு மாதங்களுக்கான மின் நுகர்வு, இரு மாதங்களான வீதத்தின் அடிப்படையில், சமமாக பிரிக்கப்பட்டு உள்ளது. அந்த நுகர்வு, இரு மாதங்களுக்கான வீதப்படி கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. கணக்கீடு செய்யும்போது, அதில் தனித்தனியே, ஒவ்வொரு, இரு மாதங்களுக்கான நுகர்விலும், தலா, 100 யூனிட் இலவச மின்சாரம் கழிக்கப்பட்டு, செலுத்த வேண்டிய கட்டணம் கணக்கிடப்பட்டு உள்ளது.
கூடுதல் அவகாசம்:
அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட தொகையில், மார்ச், ஏப்., மாதங்களில், முந்தைய மாத கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையும் கழிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகை அதிகமாக இருப்பின், அந்த தொகை, வரும் கணக்கீட்டில் சரிசெய்யப்படும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில், சில பகுதிகளில் உள்ள தாழ்வழுத்த நுகர்வோர், மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி, மார்ச், 25 முதல் ஜூலை, 14 வரை இருப்பின், அவர்களுக்கு, இம்மாதம், 15ம் தேதி வரை, கட்டணம் செலுத்த கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது.

அவ்வாறு அறிவிக்கப்பட்ட கடைசி தேதி, மேலும், 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர்கள், வரும், 30ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும்.அரசால் அறிவிக்கப்பட்டுள்ள, நோய் கட்டுப்பாடு பகுதிகளில் உள்ள நுகர்வோர், தங்கள் பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட தேதியில் இருந்து, 15 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, மின் நுகர்வோர்கள் கூறியதாவது: பல வீடுகளில், மின் கட்டணம், 10 ஆயிரம் ரூபாய்; 20 ஆயிரம் ரூபாய் என, பல மடங்கு வந்துள்ளது. கையில் பணம் இல்லாததால் தான், அதிகம் வந்துள்ள மின் கட்டணத்தை, ஒரே தவணையில் செலுத்த முடியவில்லை. எனவே, கூடுதல் அவகாசத்துடன், மூன்று தவணைகளில், மின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments