Ticker

6/recent/ticker-posts

Ad Code

எல்லைப் பிரச்னையில் சீனாவுக்கு கண்டிப்பு! முந்தைய நிலையே தொடர வலியுறுத்தல்

எல்லையில் இருந்து, படைகளை திரும்பப் பெறுவது குறித்து, இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் இடையேயான, நான்காம் கட்ட பேச்சு, 15 மணி நேரம் நடந்தது. 'லடாக்கில் முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும். ஏற்கனவே செய்த ஒப்பந்தங்களை மதித்து நடக்க வேண்டும்' என, சீனாவுக்கு கண்டிப்புடனும், உறுதியுடனும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. லடாக்கில், இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. நம் படைகளும் குவிக்கப்பட்டதால், எல்லையில் பதற்றம் உருவானது. கடந்த மாதம், 15ம் தேதி, எல்லையில் நடந்த மோதலில், நம் ராணுவத்தைச் சேர்ந்த, 20 பேர், வீர மரணம் அடைந்தனர். ஆனால், தன் தரப்பில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவலை தெரிவிக்க, சீனா மறுத்து வருகிறது.
கண்டிப்பு:
இதற்கிடையே, நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கடந்த, 5ம் தேதி, சீன வெளியுறவு அமைச்சர், வாங்க் யீ உடன், தொலைபேசியில் பேச்சு நடத்தினார். அப்போது, படைகளை திரும்பப் பெறுவதற்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.அதன்படி, கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்க் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சீன படைகள், 2 கி.மீ., திரும்பச் சென்றன. ஆனாலும், சில பகுதிகளில், இரு படைகளும் தொடர்ந்து முகாமிட்டுள்ளதால், பிரச்னை நீடித்து வருகிறது. 

படைகளை விலக்கி கொள்வது குறித்து விவாதிக்க, ராணுவ படைத் தளபதிகள் தலைமையிலான, நான்காவது கூட்டம், லடாக்கின் சுஷுலில், நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு துவங்கியது.இந்தக் கூட்டம், நேற்று அதிகாலை, 2:00 மணி வரை, தொடர்ந்து, 15 மணி நேரம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்படவில்லை. 

அதே நேரத்தில், கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது தொடர்பாக, ராணுவ உயரதிகாரிகள் கூறியதாவது:ஏற்கனவே நடந்த பேச்சுகளின் அடிப்படையில், எல்லையில் இருந்து படைகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன. சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த, மே, 5ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என, கூட்டத்தில் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சீனா கூறும் புதிய எல்லைகளை ஏற்க முடியாது. ஏற்கனவே, இரு நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தங்கள், புரிந்துணர்வுகளின் அடிப்படையில், எல்லை நிர்வாக நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சீனாவுக்கு உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிராந்தியத்தில் அமைதி நிலவுவதை, சீனா உறுதி செய்ய வேண்டும். அதற்கேற்ப, தன் எல்லையை உணர்ந்து, கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கறாராக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் ஒப்புக் கொள்ளும் வகையில், கண்காணித்து உறுதி செய்யும் வகையில், படைகள் திரும்பப் பெறும் நடவடிக்கை நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதுவரை நடந்த பேச்சுகளில், இந்த பேச்சு, மிக அதிக நேரம் நடந்துள்ளது. இந்திய தரப்பில், லடாக்கில் உள்ள, 14ம் பிரிவின் படைத் தளபதியான, லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங், இந்த பேச்சில் பங்கேற்றார்.

பேச்சின்போது விவாதிக்கப்பட்டது தொடர்பாக, ராணுவத் தலைமை தளபதி, எம்.எம்.நரவானேயிடம் அவர் விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து, ராணுவத்தின் உயரதிகாரிகளுடன், நரவானே ஆலோசனை நடத்தினார்.
சீனா விளக்கம்:
இந்த பேச்சு குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், ஹூவா சுன்யிங் கூறியதாவது: நான்காம் கட்ட பேச்சில், பல முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. படைகளை விலக்கிக் கொள்வது குறித்து, முக்கிய ஆலோசனை நடந்தது.எல்லையில், பதற்றத்தை தணித்து, அமைதியை ஏற்படுத்த, அடுத்த கட்ட நடவடிக்கைகள் நிச்சயம் உதவும். இந்த பேச்சின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை, இந்தியாவுடன் இணைந்து நடைமுறைபடுத்துவோம். இவ்வாறு, அவர் கூறினார்.
பீரங்கிகள் வாங்க ஒப்புதல்:
எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், சீனா, 'டி - 15' என்ற இலகு ரக பீரங்கிகளை எல்லையில் குவித்துள்ளது. அதே நேரத்தில், நம் ராணுவத்திடம், இலகு ரக பீரங்கிகள் இல்லை. மேலும், சீனா எல்லை வரை, சாலை வசதிகளை செய்துள்ளது.

நம் நாட்டிலும், எல்லை வரை சாலைகள் அமைக்கும் பணி நடந்தாலும், அது முழுமை அடையவில்லை. அதனால், பீரங்கிகளை எல்லைக்கு எடுத்துச் செல்வதில் சிரமம் உள்ளது. இதையடுத்து, மிகவும் உயரமான பகுதிகளுக்கும், விமானம் மூலம் சுலபமாக எடுத்து செல்லக் கூடிய, இலகு ரக பீரங்கிகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ராஜ்நாத் நாளை பயணம்:
நம் ராணுவத்தின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங், இரண்டு நாள் பயணமாக, நாளை லடாக் செல்கிறார். அவருடன், ராணுவத் தலைமை தளபதி நரவானேயும் செல்கிறார்.கடந்த, 3ம் தேதியே, லடாக் செல்வதற்கு, ராஜ்நாத் சிங் திட்டமிட்டிருந்தார். திடீரென அது ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, எல்லைக்கு சென்று ராணுவ வீரர்களை சந்தித்து ஊக்கமளித்தார்.

தற்போது லடாக் செல்லும் ராஜ்நாத் சிங், எல்லையில் படைகளின் தயார் நிலை குறித்து, ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார். ராணுவ வீரர்களையும் அவர் சந்திக்க உள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments