சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், மாணவர்களை விட மாணவியர், 5.96 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, பிப்., 15 முதல், மார்ச், 30 வரை நடந்தது. பிரச்னைஆனால், கொரோனா தொற்று காரணமாக, மார்ச் 19 முதல், 30 வரை நடத்தப்பட இருந்த, 12 பாடங்களுக்கான தேர்வுகள், ஜூலை 1க்கு தள்ளி வைக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் பிரச்னையால், மீண்டும் இந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டன. ரத்தான தேர்வுகளுக்கு, சராசரி மதிப்பெண் வழங்க முடிவானது.அதன்படி, தேர்வு எழுதிய மூன்று பாடங்களில், மாணவர்கள் எதில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனரோ, அந்த மதிப்பெண்ணை, தேர்வு ரத்தான பாடத்துக்கு வழங்குவது என முடிவானது. இதையடுத்து, விடைத்தாள் திருத்தம், மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு போன்றவை முடிந்தன.
இந்நிலையில், நேற்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதியவர்களில், 88.78 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 2019ஐ விட, 5.38 சதவீதம் அதிகம். மாணவர்களை விட மாணவியர், 5.96 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்று உள்ளனர். அதாவது, 12 லட்சம் பேர் விண்ணப்பித்து, 11.92 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில், 10.59 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
'பெயில்' கிடையாது
சி.பி.எஸ்.இ., தேர்வு எழுதிய மாணவர்களில், தேர்ச்சி மதிப்பெண் பெறாத மாணவர்களுக்கு முன், 'பெயில்' என்று குறிப்பிட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பெயில் என்ற வார்த்தை நீக்கப்பட்டு, அதற்கு பதில், மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்ற வார்த்தை குறிப்பிடப்படுகிறது. தேர்வர்கள், தங்களின் மதிப்பெண் பட்டியலை, 'டிஜி லாக்கர்' என்ற, டிஜிட்டல் தளத்தில் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
0 Comments