Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஸ்வப்னா தமிழகம் வந்தது அம்பலம்; இ-பாஸ் தந்த அதிகாரிகள் யார்?

தங்க கட்டிகள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னா, தமிழகத்திற்கு வந்து சென்றதற்கான, 'சிசிடிவி' காட்சிகள் வெளியாகி உள்ளன. அவருக்கு, 'இ - பாஸ்' கொடுத்தது யார் என்ற, சர்ச்சை எழுந்துள்ளது.

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர், ஸ்வப்னா, 34. இவர், ஐக்கிய அரபு நாட்டில் பிறந்து வளர்ந்தவர். கணவரிடம் விவாகரத்து பெற்ற இவர், 2013ல், கேரளா திரும்பினார்.
'பார்சல்'
திருவனந்தபுரத்தில், 'ஏர் இந்தியா' விமான நிறுவன அலுவலகத்தில் பணிபுரிந்தார். உடன் பணிபுரிந்த அதிகாரி மீது, பொய் புகார் அளித்து, சர்ச்சையில் சிக்கினார். பின், அங்குள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவலகத்தில், நிர்வாக செயலராக பணியாற்றினார். இதையடுத்து, கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்து வந்தார். 

இந்நிலையில், சில தினங்களுக்கு முன், கேரளாவில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அலுவலகத்திற்கு, ஒரு, 'பார்சல்' வந்துள்ளது. அதில், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 30 கிலோ தங்க கட்டிகள் இருந்தன.துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, இந்த தங்க கட்டிகள் விவகாரத்தில், ஸ்வப்னா மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக, துாதரக அதிகாரி பி.எஸ்.சரித் கைது செய்யப்பட்டார்.

தகவல் அறிந்து, கூட்டாளி சுரேஷ் என்பவருடன், ஸ்வப்னா தலைமறைவானார். இதற்கிடையே, தங்க கட்டிகள் கடத்தல் விவகாரம் குறித்து, என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
புதிய சர்ச்சை
அவர்கள், பெங்களூரில் பதுங்கி இருந்த, ஸ்வப்னா மற்றும் சுரேஷை கைது செய்து, எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.ஸ்வப்னா மற்றும் சுரேஷ் ஆகியோர், தலைமறைவாக இருந்தபோது, திருவனந்தபுரத்தில் இருந்து, தமிழகத்தில், தென்காசி மாவட்டம், செங்கோட்டைக்கு வந்து சென்ற, 'சிசிடிவி' காட்சிகள் வெளியாகி உள்ளன. 

இருவரும், எஸ்.யூ.வி., ரக காரில் வந்துள்ளனர். நெல்லையில் இருந்து செங்கோட்டை செல்லும் வழியில் காரை நிறுத்தி, நந்தினி என்ற பெண்ணுடன், ஸ்வப்னா பேசியதாக கூறப்படுகிறது; இதை சிலர் பார்த்துள்ளனர். ஊரடங்கு அமலில் இருப்பதால், தமிழகத்தில், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல, 'இ - பாஸ்' வேண்டும். 

அதுவும், உறவினர் இறப்பு, திருமணம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே, இ - பாஸ் வழங்கப்படும். இந்த பாஸ் கிடைக்காததால், தமிழக - கேரள எல்லையில், 10க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்து, தம்பதியர், அவரவர் மாநிலங்களுக்கு பிரிந்து சென்று உள்ளனர். 

ஆனால், மாநிலம் விட்டு மாநிலம் வர, ஸ்வப்னாவுக்கு, இ - பாஸ் கொடுத்தது யார் என்ற, புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. ஸ்வப்னா, செங்கோட்டையில் யாரை சந்தித்தார்; அவர்களுக்கும், ஸ்வப்னாவுக்கும் என்ன தொடர்பு; அவருக்கு, பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா?அவருக்கு, இ - பாஸ் கொடுத்த அதிகாரிகள் யார் என்பது குறித்து, பல்வேறு கோணங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments